சனி, 23 ஜூன், 2012


புதிய உலக ஒழுங்கை உருவாக்க அமெரிக்காவுக்கு போட்டியாக ஈரானுடன் கைகோர்த்துள்ள இலங்கை
பிறேசிலில் றியோ பிளஸ் 20 மாநாட்டின் போது தனியாகச் சந்தித்துப் பேசிய ஈரானிய ஜனாதிபதி மஹ்முட் அகமட்நியாட்டும், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், புதிய உலக ஒழுங்கு ஒன்று
உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக ஈரானிய செய்தி நிறுவனமான ‘இர்னா‘ செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திரமான நாடுகள் தமது முன்னேற்றத்துக்கு, தமக்குள் ஒத்துழைப்பை அதிகரிப்பது அவசியம். நீதியைத் தேடும் நாடுகள் புதிய உலக ஒழுங்கை வடிவமைக்க ஒத்துழைக்க வேண்டும்.
இன்றைய பிரச்சினைகளுக்குப் பின்னால் இருப்பவர்கள், புதிய ஒழுங்கை வகுக்கத் தகுதியற்றவர்கள். மேலாதிக்க சக்திகளிடம் இருந்து சுதந்திரமான நாடுகள் கடும் அழுத்தங்களை சந்திக்கின்றன.
ஆனால், உண்மையில் இந்த பொருளாதாரத் தடைகள், கண்டனத் தீர்மானங்கள் போன்ற அழுத்தங்கள் அந்த நாடுகளின் எதிர்ப்பாற்றலைப் பாதிக்காது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மனிதஉரிமைகளை மிகப்பெரியளவில் மீறுவோர், தமது தவறுகளை மறைக்க இறைமையுள்ள நாடுகளுக்கு எதிராக மனிதஉரிமைகளை பயன்படுத்திக் கொள்கின்றனர். திமிர் பிடித்த சக்திகள் சுற்றுச்சூழல் விவகாரத்தையும் கூட அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு எதிராக அழுத்தம் கொடுப்பதற்குப் பயன்படுத்திக் கொள்கின்றன.
அவர்கள் உண்மையான சுற்றுச்சூழல் காப்பாளர்களாக இருந்தால், சூழலை மாசுபடுத்தும் தமது தொழில்நுட்பங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். சுதந்திரமான நாடுகளைப் பலவீனப்படுத்தும் முன்னேற்றத்தைத் தடுக்கும் தற்போதைய உலக ஒழுங்குமுறை மாற்றப்பட்டு விடுமோ என்று அவர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
தெஹ்ரானில நடைபெறும் அணிசேரா நாடுகளின் மாநாடு சுதந்திரமான நாடுகள் சாதகமான அடிகளை எடுத்து வைக்க வாய்ப்பாக அமையும். இன்றைய உலகில் சுதந்திரமான அமைப்புகளுக்கு உள்ள குறைபாட்டை நிவர்த்தி செய்யும் திறன் அணிசேரா நாடுகள் அமைப்புக்கு உள்ளது. இலங்கையுடன் ஒத்துழைப்பை விரிவாக்க ஈரான் கடமைப்பட்டுள்ளது. என்று ஈரானிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அவரது கருத்துகளுடன் உடன்பட்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஈரானுடனான இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை வரவேற்றதுடன், அழுத்தம் கொடுக்கும் திமிர் பிடித்த சக்திகளை எதிர்த்து நிற்க அணிசேரா அமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தெஹ்ரானில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் மாநாடு அனைத்துலக சமூகத்தில் தனது பங்கை அதிகரித்துக் கொள்ள உதவும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக