முறிகண்டி காணிகள் மக்களுக்கு ஒருபோதும் வழங்கப்பட மாட்டாது: ஒட்டுசுட்டான் பிரதேச செயலர்
முல்லைத்தீவு மாவட்டம் திருமுறிகண்டிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் காணிகள் மீளவும் அவர்களுக்கு வழங்கப்படமாட்டாது என்றும் குறித்த காணிகளின் உரித்துப் பத்திரங்களில் இருந்து மக்களின் பெயர்கள் அகற்றப்பட்டிருப்பதாகவும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் மக்களிடம் நேரடியாத் தெரிவித்திருக்கின்றார்.
திருமுறிகண்டிக் கிராமத்தில் மீள்குடியேற்றம் இடம்பெறாத நிலையில் குறித்த கிராம மக்கள் தொடர்ந்தும் வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனர்.
முறிகண்டிக் கிராம மக்களை நேரில் சென்று சந்தித்த ஒட்டுசுட்டான் பிரதே செயலர் மக்களை மிரட்டும் பாணியில் உரையாடியிருக்கின்றார்.
திருமுறிகண்டி விவகாரம் இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் பலத்த நெருக்கடியினைக் கொடுத்திருக்கின்றது.
எனவே இதனைப் பெரிதுபடுத்தாது வழங்கப்படுகின்ற காணிகளில் குடியேறுங்கள். உங்கள் காணிகளுக்கான உரித்து பத்திரங்கள் இனிவருங் காலங்களில் செல்லுபடியற்றவையாகி விட்டன.
எந்தக் காலத்திலும் அந்தக் காணிகளில் குடியேற உங்களுக்கு அனுமதி வழங்கப்படாது. எனவே ஒரே ஒரு சந்தர்ப்பமாகவே மாற்றுக்காணிகள் வழங்கப்படவுள்ளன என்று பிரதேச செயலர் மக்களை மிரட்டியிருக்கின்றார்.
பிரதேச செயலரின் இம் மிரட்டலை அடுத்து கணிசமான மக்கள் இந்த நடவடிக்கைக்கு உடன்பட்டிருப்பதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய இன்று மக்களுக்கு காணிகள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தினை மேற்கோள் காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சில நாட்களுக்கு முன்னர் குறித்த மக்களைச் சந்தித்த ஐ.நா தொண்டு நிறுவனம் ஒன்று சொந்த இடம் இல்லாது வேறு இடத்தில் குடியேறினால் தம்மால் உதவிகளை வழங்க முடியாது என்று மக்களிடம் தெரிவித்ததாகவும் அதற்கு உதாரணமாக புதுக்குடியிருப்பு மக்களை திம்பிலிப் பகுதியில் குடியேற்றியமையால் தாம் உதவிகளை வழங்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியதாகவும் தெரியவருகிறது..
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் திருமுறிகண்டியில் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ள நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றது.
இந்நிலையில் உண்ணாவிரதத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பங்கேற்பரா? என்பதில் சந்தேகம் நிலவுவதாக நலன்புரி முகாம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக